Sunday, June 27, 2010

இலச்சினை

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்கள்.


தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாகாப்பட்டிருக்கும் இந்த இலச்சினை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. கடல்கோள்களை எதிர்கொண்டும், காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கேற்ப மூன்று விரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத்தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக் கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம் பெறுகின்றன. சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சிந்துநதிக் கரையில் 1500 ஏக்கர் பரப்பளவில் செழித்தோங்கி 700 ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்துவெளி நாகரிகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள்-எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழமண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம் கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.

படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய திறன்மிகு வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன. இலச்சினையில் ஏழு குறியீடுகள்/சின்னங்கள் இடம் பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு. திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு எனும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும். ஏழு என்பது 'எழு' என்பதாகவும் 'எழுபதில்' இடம்பெறும். இலக்கை எட்டுவதற்கு எழுவது/'எழு' என்பதாகவும் அமைகிறது.

இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக(Motto) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அமைந்துள்ளது. ஒலைச்சுவடியில் இடம் பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாக கருதத்தக்கது. இன்றைய உலகின் தேவை நல்லிணக்கம், சாதி, மதம் கடந்து மக்கள் மனநிறைவோடு வாழும் மனிதநேயம் செறிந்த வாழ்க்கை. இதற்குத் தேவை வேறுபாடற்ற உலகம். ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக் கொடை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதாகும். இச்சிந்தனை 2000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும்.

 நன்றி: தினகரன்

No comments:

Post a Comment