Monday, June 21, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - இனமானத் திருவிழா!

தமிழினத்துக்கு எதிரான ஜெ கூட்டத்தை மக்கள் அடையாளம் காண்பர்
ஈழத் தமிழர், உலகத் தமிழர் உரிமை பெற்றிட
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - இனமானத் திருவிழா - நல்ல துவக்கம்!
தமிழர் தலைவர் கி.வீரமணி அறிக்கை
சென்னை, ஜூன் 20- ஈழத் தமிழர், உலகத் தமிழர் இனம் உரிமை பெற்றிட உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஒரு நல்ல துவக்கம். எதற்கெடுத்தாலும் போராட்டம், சேற்றை வாரி இறைப்பது, ஈழத் தமிழர் பிரச்சினை வரை நாகரிகமில்லாமல் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டத்தினரையும் மக்கள் அடையாளம் காண்பர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் அவரது அறிக்கை வருமாறு:
எதிர்க்கட்சித் தலைவர் - அவரது கூட்டத்தார்! பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றியதுபோல்...
தமிழ்நாட்டு அறிக்கைத் தலைவியாகக் காட்சியளித்து நாளுக்கொரு போராட்டத்தை, மலையேறிய நிலையிலும் நடத்திடும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அவரது கூட்டத்தாருக்கும், கோவையில் முதலாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெற விருப்பதையும், உலக முழுவதிலும் உள்ள நல்ல தமிழ் நெஞ்சங்கள் பற்றோடும் பாசத்தோடும் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கில் வந்து குவியத் தொடங்கி விட்டனர் என்ற செய்தியையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் கூறும் உவமைபோல், பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றியதுபோல உளற ஆரம்பித்து வயிற்றெரிச்சலையும், வசவுகளையும் வாரி இறைத்து அதில் இன்பங் காணுகின்றனர்.
என்னே இழி நிலை!
நனி நாகரிகமின்றி சேற்றை வாரி இறைப்பதா? அரசியல் வேறு; மொழி வேறு. பொதுப் பிரச்சினைகளில் ஒன்றுபட்டு நிற்கும் அரசியல் நனி நாகரிகத்திற்கே இடமின்றி, குறைகூறி சேற்றையும், கையில் எடுக்கக் கூடாத அசிங்கங்களை யும், குப்பைகளையும் கலைஞர் மீதும் அவரது அரசுமீதும் வாரி இறைக்கும் திருப்பணியிலே ஈடுபட்டு வருகின்றனர்!
பாதிக்கப்படுவது கலைஞரோ - அரசோ அல்ல
இதனால் பாதிக்கப்படுவது முதல்வர் கலைஞரோ, அவரது அரசோ, உலகத் தமிழ் செம்மொழி மாநாடோ அல்ல. இந்த வசவுகள் அர்ச்சனைகள் இவையெல்லாம் அந்த வளமான வயல்களில் இடப்பட்ட உரங்கள்!
எதிர்நீச்சல் _ எப்போதும் ஈரோடு சென்றவர்களுக்கு நிலாச் சோறு. களைப்படைய மாட்டார்கள்.
பிலாக்கணங்கள் அவர்களை மேலும் உற்சாகம் கொள்ளவே செய்விக்கும்.
அண்ணா பெயரில் கட்சி
அண்ணா பெயரில் கட்சி! அவர்தம் மூல தத்துவங்கள் இன்று காற்றில் பறக்க விடப்படுகின்றன.
உண்மைத் தமிழர்கள் அடையாளம் காண்பர்!
ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கு ஓரணியில் ஒன்று திரண்டு குரல் கொடுக்க மனமற்றவர்களை, தமிழ் இன உணர்வினை போலிச் சாயமிட்டு வருபவர்களைத் தக்க வகையில் அடையாளம் காண உண்மைத் தமிழர்கள் தவறிட மாட்டார்!
செம்மொழி மாநாடு ஒரு நல்ல துவக்கம்
செம்மொழி மாநாடு ஒரு வகையில் ஈழத் தமிழர், உலகத் தமிழர் இனம் உரிமை பெற்றிட ஒரு நல்ல துவக்கம்.
தமிழர்களுக்கு இது ஓர் இனமானத் திருவிழா!
உலகத் தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்ட பிறகே இப்படி ஒரு மாநாடு நடைபெற வேண்டும் என்று திசை திருப்ப முயலுவோருக்கு, ஒன்று புரிய வேண்டும்.
உலகத் தமிழர்களின் உன்னத எழுச்சி
இத்தகைய மாநாட்டின் மூலம் உலகத் தமிழினத்தின் உன்னத எழுச்சியே அப்பிரச்சினைகள் தீருவதற்கு முன்னோடியாக அமையும் என்பது உறுதி!
எதைக் கண்டாலும் காமாலைக் கண்ணர்களுக்கு பழுதுதான் புலப்படும். வளர்ந்தோங்கிய விழுதுகளும், அதைவிட பலமான வேர்களும் ஒருபோதும் தெரியாது. அது அவரவர்கள் குற்றமே தவிர, மற்றவர்களது குற்றமல்ல.
பச்சைத் தமிழர் காமராசர் ஒன்று கேட்பார்: உன் வீட்டில் நடந்தால் கல்யாணம்; என் வீட்டில் நடந்தால் துக்கமா? என்று. அதுதான் இப்போது இவர்களுக்கு - _ ஜெயலலிதா, சோ போன்றவர்களுக்கு தாறுமாறான தரக்குறைவான வயிற்றெரிச்சல் _ அவைகளைக் காணும்போது.
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
இதனால் மாநாட்டின் வெற்றியை எவரும் தடுத்திட முடியாது. காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
தலைவர்
திராவிடர் கழகம்
20.6.2010
சென்னை

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

ஆசிரியர் அவர்களின் அறிக்கை யோசிக்க வைக்கிறது ...

" உன் வீட்டில் நடந்தால் கல்யாணம்; என் வீட்டில் நடந்தால் துக்கமா? ''

" உலகத் தமிழர்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்பட்ட பிறகே இப்படி ஒரு மாநாடு நடைபெற வேண்டும் என்று திசை திருப்ப முயலுவோருக்கு, ஒன்று புரிய வேண்டும்.இத்தகைய மாநாட்டின் மூலம் உலகத் தமிழினத்தின் உன்னத எழுச்சியே அப்பிரச்சினைகள் தீருவதற்கு முன்னோடியாக அமையும் என்பது உறுதி! "

அனைவரயும் ஏற்றுக் கொள்ள வைக்கும் வாதம் ஆசிரியருடையது ...

தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாய் இருக்கிறேன் ....

வருகிறேன் பிரின்ஸ் ...

Post a Comment